Wednesday, January 30, 2013

சில சுவாரஸ்யங்கள்: கோழி முட்டையின் அறிவியல் பூர்வமான கட்டமைப்பு - விரிவான அறிமுகம்...!!!

மக்களே...!!!

அடுத்த பதிவு என்ன எழுதலாம்ன்னு கொஞ்சம் யோசனையில இருந்தேன். சுவாரஸ்யங்கள் பகுதி எழுதி ரொம்ப நாள் ஆச்சி. அதோட சில தொடர்கள் எழுதப்போறேன்னு அறிவிச்சி ரொம்ப நாள் ஆகுது, ஆனா ஒன்னும் எழுத ஆரம்பிக்கல இப்படி பல யோசனைகள். ஆனா பாருங்க, இன்னைக்கு நான் ஒரு வலைப்பூவுல படிச்ச ஒரு பதிவு என்னை ரொம்பவே கோவப்படுத்தினது மட்டும் இல்லாம எனக்கு அடுத்ததா என்ன எழுதலாம்ன்னு ஒரு ஐடியாவும் கொடுத்தது. அந்த பதிவுக்கான லிங்க் இங்க குடுத்திருக்கேன்.

நாம சாப்பிடற கோழி முட்டை கோழியோட அசுத்த ரத்தத்துல இருந்து உருவாகுதுன்னும், அதை சாப்பிட கூடாதுன்னும் எழுதியிருந்தார் அந்த நண்பர். இதை விட ஒரு முட்டாள்தனமான  கருத்தை நான் கேட்டதும் இல்லை, படிச்சதும் இல்லை. முட்டை அசுத்தமானது என்பது மிக மிக தவறான தகவல். முட்டை என்பது முழுக்க முழுக்க புரதங்களும் கொழுப்பு வகை சத்துகளும் நிறைந்த சிறந்த உணவு.

முட்டையின் வெள்ளை பகுதியில் -

1. 54% - OVALBUMIN - ஓவாஆல்புமின்  - புரதம் 
2.  12% - OVATRANSFERRIN - ஓவாடிரான்ஸ்பெரின் - இரும்பு சத்து      
3. 11% - OVAMUCOID - ஓவாமியூக்காய்டு  - கிருமி நாசினி 
4.  4% - OVAGLOBULIN G2 - ஓவாகுலோபுலின் G2 - மற்றொருவகை புரதம். இதில்
     பல வகை உண்டு. அதில்  G2 என்பது ஒரு வகை     
5.  4% - OVAGLOBULIN G3 - ஓவாகுலோபுலின் G3
6. 3.5% - OVAMUCINE - ஓவாமியூசின் - நோய் எதிர்ப்பு புரோட்டீன் - கிட்டத்தட்ட
   கிருமிநாசினி வகை 
7. 3.4% - LYZOZYME - லைசோசைம் - கிருமி தொற்று எதிர்ப்பு நொதி 
8. 1.5% - OVAINHIBITOR - ஓவா இன்ஹிபிடார் - நோய் தொற்றை தடுக்கும்
    கரிமவேதி பொருள் 
9. 1% - OVAGLYCOPROTEIN - ஓவாகிலைக்கோபுரோட்டீன் - சர்க்கரை சத்தும்
    புரதசத்தும் இணைந்த மற்றொரு புரத வகை.    
10. 0.8% - FLAVOPROTEIN - பிளேவோபுரோட்டீன் - மற்றொரு புரத வகை - இரும்பு
     சத்து இணைந்த புரதம். 
11. 0.5% - OVAMICROGLOBULIN - ஓவாமைக்ரோகுலோபுளின் - இதுவும் ஒரு
     வகை புரதமே. 

நம்ம கோழி முட்டையில் கூட சில சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கு. ஒன்னு ஒண்ணா பார்க்கலாம். முதல் தகவல் கீழ சொல்லியிருக்கிற அவிடின் பத்தினது.

12. 0.05% - AVIDIN - அவிடின் - இது சமைக்காத முட்டையில் மட்டும் இருக்கும் ஒருவகை புரதபொருள் - சமைத்த முட்டையில் அளவுக்கு அதிக வெப்பத்தின் காரணமாக இது முழுமையாக உடைந்து செயலற்றதாகி விடும். பேக்டீரியா தொற்றை தடுக்கும் வேலையை செய்யும். ஆனால், அளவுக்கு அதிகமாக நமது உடலில் சேர்ந்தால் சில விட்டமின்களை அதனுடைய வேலையை செய்ய விடாமல் தடுக்கும் இயல்பு உடையது.   எனவே முட்டையை சமைக்காமல் உண்ணுவது முடிந்த வரை கைவிட வேண்டும். 

முட்டையின் மஞ்சள் பகுதி (EGG YOLK) என்பது முழுக்க முழுக்க நிறைவுற்ற மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. 

  • UNSATURATED FATTY ACIDS - நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் 
    • Oleic acid - ஒலியிக் அமிலம் - 47%
    • Linoleic acid - லினோலெயிக் அமிலம் - 16%
    • Palmitoleic acid - பால்மிடோலெயிக் அமிலம் -  5%
    • Linolenic acid - லினோலெயிக் அமிலம் - 2% 

  • SATURATED FATTY ACIDS - நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் 
    • Palmitic acid, பால்மிடிக் அமிலம் - 23%
    • Stearic acid - ஸ்டியரிக் அமிலம் - 4%
    • Myristic acid - மிரிஸ்டிக் அமிலம் - 1%
இது மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் பல புரத சத்துகளை முட்டை தன்னுள் கொண்டது. மேற்சொன்ன கொழுப்பு அமிலங்கள் மனித நரம்பு மண்டலம் மற்றும் சிறந்த மூளை வளர்ச்சிக்கு மிக மிக இன்றியமையாத சத்துகள். கர்பிணி பெண்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு மிக மிக சிறந்த உணவு. 

முட்டையின் ஓடு கால்சியம் கார்பனேட் என்னும் வேதிப்பொருள். தெரியாமல் குழந்தைகள் சாப்பிட்டாலும் நமது வயிற்றுக்குள் செரிக்கப்பட்டு இதில் உள்ள கால்சியம் நமது பற்கள் எலும்பு வளர்ச்சி மற்றும் இன்னும் பல விதங்களில் உபயோகபடுத்தப்படும். இதனால் நமது உடலுக்கு எந்த வித தீங்கும் இல்லை.

தற்போது முட்டையில் உள்ள ஒரே தீங்கு, முட்டை மட்டும் அல்ல கோழி இறைச்சியிலும் உள்ள தீங்கு என சொன்னால் அது மனிதர்களால் கோழிகளுக்கு சீக்கிரம் அதிக எடையில் வளர போடப்படும் ஸ்டீராய்ட் ஊசி மருந்துகள். இது மனிதர்களால் உண்டாக்கப்பட்ட தீங்கு. இந்த ஊசிகள் போடப்பட்டு வளர்க்கும் கோழியின் இறைச்சி மற்றும் முட்டைகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மற்றபடி முட்டையில் எவ்வித தீங்கும் இல்லை.

ஒரு முட்டை உருவாக தேவையான அனைத்து புரதங்களும் கொழுப்பு அமிலங்களும் கோழியின் இரத்தம் வழியா சப்ளை ஆகுது. இதுல கெட்ட இரத்தம் அப்படிங்கறது எல்லாம் ஒன்னும் இல்லை. இதை விட ஒரு முக்கியமான விஷயம் இரத்தத்தை அது கெட்ட இரத்தமாவே இருந்தாலும்  நாம சாப்பிடறதால நமக்கு எந்த கெடுதலும் வராது. நாம சாப்பிடறது எதுவா இருந்தாலும் அது BIOLOGICAL ORIGIN - அதாவது ஒரு உயிருள்ள பொருள் கிட்ட இருந்த நமக்கு கெடைக்கறதா இருந்தால் அது முழுக்க முழுக்க ஜீரணம் ஆயிடும்.


உதாரணம் சொல்லட்டுமா - பாம்பு விஷம் - பாம்போட விஷம் முழுக்க முழுக்க NUCLEASES, NUCLEOTIDASES மற்றும் PHOSPHOMONOESTERASES எனப்படும் நொதிகள் - அதாவது ENZYMES. இதனோட வேலை செல் ஜவ்வு, DNA, RNA இதெல்லாம் உடைக்கிறது. இது நமது இரத்தத்துக்குள்ள போயிடுச்சின்னா இரத்த செல்கள், அதுக்குள்ளே இருக்கிற DNA RNA இதையெல்லாம் உடைச்சி உடனடி மரணம். இந்த நொதிகள் எல்லாம் புரோட்டீன்கள். இது இரத்தத்துக்குள்ள போனாதான் நமக்கு ஆபத்து. பாம்பு கடிக்கிற பேர்ல நம்ம உடல் மேல துளை போட்டு விஷத்தை இரத்தம் உள்ள செலுத்துது. அதனால தான் மரணம் நிகழுது. இதுவே வாய் வழியா நாம எடுத்துகிட்டோம் அப்படின்னா, இது வெறும் புரோட்டீன். அப்படியே ஜீரணம் ஆயிடும். சாப்பிடும்போது நம்ம வாய், உணவுக்குழாய், வயிறு அதாவது இரைப்பை இங்க எங்கயும் புண் எதுவும் இருக்க கூடாது. அதாவது நம்ம இரத்தம் கூட சேரும் வாய்ப்பு எங்கயும் இருக்க கூடாது. அதுவே வேதிப்பொருள் கலந்து தயாரிக்கப்படும் விஷத்துக்கு இது பொருந்தாது.  

ஓகே மக்களே...!!! ரெண்டாவது சுவாரஸ்யமான தகவல் - வேகவைத்த முட்டையை உடைக்கிறப்போ  அதுக்குள்ளே ஒரு முனை கொஞ்சம் குழிவா இருக்கும். பார்த்திருக்கிங்களா...??? அதுக்கு AIR SACK OR AIR SPACE  - காற்றுப்பை அப்படின்னு பேரு. அது எப்படி எதுக்காக உருவாகுதுன்னு தெரியுமா? கோழியோட வயிற்றுக்குள் இருக்கிற வரை முட்டையில் அது மாதிரி குழிவான பகுதி இருக்காது. கோழியோட உடல் வெப்பநிலை கிட்டத்தட்ட 106 டிகிரி பேரன்ஹீட். செல்சியஸ்ல சொல்லனும்ன்னா 41 டிகிரி செல்சியஸ். இந்த அதிகபட்ச வெப்பநிலையில உருவாகும் முட்டை உள்ள இருக்கிற வரை முட்டையின் ஓடு முழுமைக்கும் பரவி இருக்கும். வெளிய வந்ததும் வெளியில உள்ள குறைந்த வெப்பநிலையில (அதிகபட்சம் முப்பது டிகிரிக்குள்ள தான் இருக்கும்) சுருங்க ஆரம்பிக்கும். அப்படி சுருங்கும்போது முட்டைக்குள்ள உருவாகும் வெற்றிடம் தான் நாம பார்க்கிற குழிவான பகுதி.

அதே சமயம் முட்டையின் ஓடு - கால்சியம் கார்பனேட் - இது வேற ஒன்னும் இல்ல... நம்ம சுண்ணாம்பு கல் தான். பார்க்க கடினமா இருந்தாலும் அதுல கண்ணுக்கு தெரியாத நெறைய ஓட்டைகள் இருக்கும். கிட்டத்தட்ட 7000 ஓட்டைகள் இருக்கலாம்ன்னு கணிச்சிருக்காங்க. இந்த ஓட்டைகள் வழியே வெளிய இருந்து காற்று முக்கியமா பிராண வாயு உள்ள போகும். அந்த வெற்றிடத்தை அடைச்சிக்கும். இந்த வாயு புதியதாக உருவாகும் கோழிகுஞ்சு சுவாசிக்க உதவும்ன்னு கூட சொல்றாங்க. இயற்கை எவ்வளவு முன்னெச்சரிக்கையா ஒவ்வொரு விசயத்தையும் செய்து வெச்சிருக்கு பார்த்திங்களா ...???

ஓகே...!!! இன்னொரு முக்கியமான அதே சமயம் மிக மிக சுவாரஸ்யமான விஷயம். கோழி குஞ்சு எங்க இருந்து வருது? முட்டை நமக்கு தெரியும். அதுல வெள்ளை கரு மஞ்சள் கரு அப்படின்னு ரெண்டு பகுதி இருக்கறது தெரியும். சரி...!!!! இதுல எந்த பகுதியில் இருந்து கோழி குஞ்சு வரும் ? எதுவும் ஐடியா இருக்கா...?????

நானே சொல்றேன். கோழி குஞ்சு இந்த ரெண்டு பகுதியில இருந்தும் வரல. நம்ப முடியல இல்ல...!!!! மஞ்சள் மற்றும் வெள்ளை கரு ரெண்டுமே புதிதாக உருவாகும் கோழி குஞ்சு நன்றாக வளர தேவையான சத்துகளை மட்டுமே குடுக்கும். அதுவும் அந்த குஞ்சு உருவாகி வளர ஆரம்பித்த பிறகே...!!! அப்போ கோழிகுஞ்சு எங்கதான் இருந்து வருது? பாக்கலாமா ?

கோழியோட முட்டை வெளிய இருந்து பார்க்க எல்லாம் ஒரே மாதிரி இருந்தாலும் தனித்தனியா சில படலங்களால் உருவாகி இருக்கும். வெளிய இருந்து பார்க்கிற வெளிப்புற ஓடு- OUTER SHELL , அடுத்தது ஓட்டை ஒட்டி ஒரு மெல்லிய வெள்ளை நிற ஜவ்வு மாதிரியான வெளிப்புற உறை - OUTER SHELL MEMBRANE (வேக வைத்த முட்டையை உடைக்கும்போது சில சமயம் நாம இதை பார்க்கலாம்), அடுத்தது வெள்ளை கருவை சுத்தி ஒரு மெல்லிய படலம் - INNER SHELL MEMBRANE, இரு பகுதிகளாக வெள்ளைக்கரு - வெளிப்புற நீர்த்த வெள்ளை கரு - OUTER LAYER OF ALBUMEN, அடுத்த கெட்டியான வெள்ளைக்கரு - INNER LAYER OF ALBUMEN, அடுத்தது வெள்ளைக்கருவையும் மஞ்சள் கருவையும்  பிரிக்கும் வெகு மெல்லிய ஜவ்வு படலம் விட்டலின் படலம் - VITELLINE MEMBRANE (இந்த ஜவ்வு படலம் தான் மஞ்சள் கருவை முழுமையா உடைந்து போகாம பாதுகாக்குது. முட்டையை உடைச்சி பாத்திரத்துல கொட்டும்போதும் மஞ்சள் கரு முழுமையா உடையாம வர இதுதான் காரணம்). இதுக்கு அப்புறம் தான் மஞ்சள் கரு. மஞ்சள் கரு சாதாரண கண்ணால் பார்க்க முழு மஞ்சள் நிற கருவா இருந்தாலும் உண்மையில் மெல்லிய வெள்ளை மற்றும் மஞ்சள் நிற படலம் மாறி மாறி உருவானது. இந்த மஞ்சள் கருவுக்கு உள்ளேயும் சிறிய துளி அளவிலான வெண்ணிற கரு (வேகவைத்த மஞ்சள் கருவை இரண்டாக உடைக்கும்போது இதை பார்க்கலாம்). 

நான் ஒரு விஷயம் சொல்றேன். ஒரு கரு உருவாகனும்ன்னா பெண்ணின் கரு முட்டையும், ஆணின் விந்தணுவும் வேணும். முக்கியமா இந்த ரெண்டும் கண்ணுக்கே தெரியாத ஒரு ஒற்றை செல்கள். இப்போ எதுவும் தோணுதா ? நீங்க நெனக்கிறது சரிதான். முட்டையோட வெள்ளை மற்றும் மஞ்சள் கரு ரெண்டுமே இவ்வளவு சிறிய செல்கள் கிடையாது.

                              (படத்து மேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம்)


உங்களுக்கு இப்போ நான் சொல்ற விஷயம் கண்டிப்பா புதுசா இருக்கும். ஒரு கோழி சேவலோட கூடினாலும் இல்லன்னாலும் முட்டை குடுக்க முடியும். ஆனா, அந்த முட்டையில் இருந்து கோழிக்குஞ்சு வரத்தான் சேவல் வேணும். ஒரு கோழி முட்டையிடும் பருவம் வந்ததும் சேவலோட சேரும். அப்போ சேவல் வெளியிடற விந்து செல்களையும் சேர்த்து முட்டையை உருவாக்கும். அதாவது கோழியோட வயித்துக்குள்ள முதல் முதல்ல முட்டை உருவாகும்போது முட்டையோட மஞ்சள் கரு தான் மொதல்ல உருவாகும். உங்கள்ள நெறைய பேரு கோழி வெட்டும்போது குட்டிக்குட்டியா நெறைய பாசிமணி கோர்த்த மாதிரி சின்னதும் பெருசுமா மஞ்சள் கருவை பார்த்திருக்கலாம். இப்போ கோழி சேவலோட சேர்ந்து அதனோட விந்து செல்களை தனக்குள்ள பாதுகாப்பா சேர்த்து வெச்சிக்கும். அப்புறமா முட்டை உருவாகும்போது தன்னோட கருமுட்டை, சேவலோட விந்து செல் ரெண்டையும் சேர்த்து, ஒரு தட்டு மாதிரியான புரோட்டீனால் ஆன டிஸ்க்ல வெச்சி மஞ்சள் கருவோட ஓட்ட வெச்சிடும். அதை சுத்தி வெள்ளை கருவை உருவாக்கி ஒரு முழு முட்டையை உருவாக்கும். அந்த முட்டையை தான் நாம பார்க்கிறோம்.


இந்த கருமுட்டை, சேவலோட விந்து செல் இருக்கிற டிஸ்க் பேரு GERMINAL DISK (OR) BLASTODERM  - ஜெர்மினல் டிஸ்க் அல்லது பிளாஸ்ட்டோடெர்ம் அப்படின்னு பேரு. இந்த டிஸ்க்கை நாம வெறும் கண்ணால் பார்க்க முடியாது. இந்த ஜெர்மினல் டிஸ்க்ல இருக்கிற ரெண்டு செல்களும் சேர்ந்து புது கோழி குஞ்சை குடுக்கும். இந்த ரெண்டு செல்லும் கோழியின் உடல் வெப்பநிலையில் மட்டும் தான் வேலை செய்யும். அந்த வெப்பநிலை இல்லன்னா ஆக்டிவா இருக்காது. அந்த வெப்ப நிலை குடுக்கதான் நாம அடைக்கக்கறது அப்படின்னு ஒன்னை வெக்கிறோம். கடைசியா,  முழுக்க முழுக்க ஜெல் மாதிரி இருக்கிற மஞ்சள் கரு உடையாம இருக்கறதுக்காக அதை சுத்தி பாதுகாப்பு படலம் இருக்குன்னு சொன்னேன். அதே மாதிரி சின்ன அதிர்வுகள் காரணமா முட்டைக்குள்ள அங்க இங்க நகராம முட்டையோட நடுவுல இருக்க வைக்க மஞ்சள் கருவோட ரெண்டு பக்கமும் இழுத்து கட்டி வெச்ச மாதிரி ரெண்டு வெள்ளை நிற புரோட்டீன் படலம் இழுத்து பிடிச்சிருக்கும். அதுக்கு CHALAZA - கலாஸா அப்படின்னு பேரு. என்னே ஒரு முன்னெச்சரிக்கை...!!!!!!!!!


                                  (படத்து மேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம்)

சேவலோட சேராம உருவாகும் முட்டையில் கோழியோட கருமுட்டை மட்டும் தான் இருக்கும். அதனால தான் அதுல இருந்து கோழிகுஞ்சு வராது. ஸோ மக்களே...!!! அநேகம் பேருக்கு இது கண்டிப்பா புது தகவல்கலா இருக்கும் அப்படின்னு நம்பறேன். படிங்க. உங்க கருத்துகளை சொல்லுங்க. அடுத்த பதிவுல சிந்திப்போம்.




7 comments:

  1. Boss one more interesting fact. Unlike mammals in birds males are homogametic and females are hetero. Sex is. Determined by female. The egg is evolved in oval shape. Coz if if slips out of nest , the oval shape helps it to make a round path to return to nest itself. Try rolling a egg , it ll not move away frm you. U can't break a egg by crushing it at its tip. Another interesting fact, the chick inside egg excretes uric acid unlike urea in mammals .this is becoz urea is water soluble and will absorb the moisture and ll make the chick to die out of dehydration , as it has no source of maternal supply . And uric acid ll not. Dissolve in water and ll not contaminate the inside egg environment. Can't keep marvelling at nature .

    ReplyDelete
  2. And a nice article by u bro. Keep it up.

    ReplyDelete
    Replies
    1. நன்றி டாக்டர்...!!!

      நீங்க சொன்ன தகவல்களை தனி பதிவாவே போட்டுட்டேன்.

      Delete
  3. முட்டைக்குள்ல இவ்ளோ விஷயம் இருக்கா!!!
    இவ்ளோ நாளா மஞ்சள் கருதான் கோழியா மாறும்னு நம்பிக்கிட்டிருந்தேன்,
    என் அறியாமையை போக்கியதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு செழியன் அவர்களே...!!!!

      இதுக்கெல்லாம் எதுக்காக அறியாமை அப்படின்னு பெரிய வரத்தை எல்லாம் சொல்றிங்க...?
      வேணும்னா ஒரு புது தகவலை தெரிஞ்சிக்கிட்டதா சொல்லிக்கலாம்.
      மஞ்சள் கருவுல இருந்து கோழிகுஞ்சு வரல அப்படின்னு தெரியாதது எல்லாம் அறியாமையில வராது :-)

      அப்பப்போ வந்து பதிவுகளை படிச்சிட்டு தவறாம பின்னூட்டம் போடுங்க, முடிஞ்சா உங்க நண்பர்களுக்கு இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தி வைங்க.
      மறுபடியும் நன்றி...!!!!!!!!!!!!!!!

      Delete
    2. /மஞ்சள் கருவுல இருந்து கோழிகுஞ்சு வரல அப்படின்னு தெரியாதது எல்லாம் அறியாமையில வராது :-)/

      அப்படியா!
      இதுகூட தெரியாம இவ்ளோநாளா இருந்துட்டேனே!!
      உங்க பதிவுகள் எளிமையா,தெளிவா இருக்கு,பாராட்டுகள்.
      (கறையோட இப்போ கோவமும் நல்லது லிஸ்ட்ல சேந்துடுச்சா!!நல்லது)

      Delete
    3. இந்த வலைப்பூவை தொடர்ந்து படிக்கிறிங்க போல இருக்கு.
      ரொம்ப நன்றி. அதேப்போல பின்னூட்டமும் போட்டு என்னை உற்சாகப்படுத்தனும்ன்னு கேட்டுக்கறேன்.

      கோவமும் நல்லதுதான்... இடத்தை பொறுத்து...!!! அதுவும் இப்போ இருக்கிற சூழ்நிலையில் கோவம்தான் நல்லது.

      Delete