Saturday, November 10, 2012

லிப்பிடுகள் - LIPIDS - கொழுப்புகள் - ஒரு விரிவான பார்வை...!!!

மக்களே...!!!

நம்ம வலைப்பூவோட ஆரம்பத்துல எழுத ஆரம்பிச்ச தொடர் இது. உயிருள்ள செல்லோட இயக்கத்துக்கு தேவையான நாலு முக்கியமான கரிம வேதிப்பொருட்களை பத்தி எழுத ஆரம்பிச்சேன். அதுல ஒன்னு எழுதப்படாம விட்டுபோச்சி.

நம்ம மொதல்ல பழைய விசயங்களை கொஞ்சம் ஞாபகப்படுத்திக்குவோம். ஒரு உயிருள்ள, வேலை செய்யும் திறனுடைய செல் முறையா இயங்கனும் அப்படின்னா, அதுக்கு நாலு முக்கியமான வேதிப்பொருட்கள் தேவை. அவை என்னென்னா, புரோட்டீன்கள் எனப்படும் புரதம், கார்போஹைட்ரேட் எனப்படும் மாவு சத்து அல்லது சர்க்கரை, லிப்பிடுகள் எனப்படும் கொழுப்பு சத்து மற்றும் நியூக்ளிக் ஆசிட் எனப்படும் மரபணுக்கள். இதுல கொழுப்புகள் தவிர மீதி மூணும் இங்க விளக்கமா எழுதிட்டேன். எழுதபடாம விட்டுப்போன கொழுப்புகள் எனப்படும் லிப்பிடுகள் தான் இன்னைக்கு பதிவு.

செல் அமைப்புல செல் சவ்வு பத்தி சொல்லும்போது கொழுப்புகள் பத்தி கொஞ்சம் சொல்லியிருக்கேன். அதுல இரட்டை கொழுப்பு படலம் பத்தியும் சொல்லியிருக்கேன். ஆர்க்கியே பேக்டீரியா செல் சுவர்ல, அடுத்ததா நாம பார்க்க போற வேறுபாடு கூட இது சம்பந்தமா தான். ஆனா, அதை விவரமா புரிய வைக்க செல் சவ்வு, கொழுப்பு இரட்டை படலம் பத்தி இதுவரைக்கும்  நான் சொல்லியிருக்கற விவரங்கள் பத்தாது. அதை செல் சுவர் பத்தின அடுத்தடுத்த பதிவுகள்ள விளக்கமா பார்ப்போம். இப்போ இன்னைக்கு பதிவுக்கு போகலாம்.



லிப்பிடுகள் - LIPIDS - கொழுப்புகள் - ஒரு விரிவான பார்வை...!!!

ஒரு உயிருள்ள உடல் அல்லது உயிருள்ள செல்லுல இருக்கிற நாலு முக்கியமான வேதி பொருட்களை பட்டியல் போட்டா (புரோட்டீன் - PROTEIN, கார்போஹைட்ரேட் - CARBOHYDRATE, நியூக்ளிக் அமிலம் - NEUCLEIC ACID மற்றும் லிப்பிட் - LIPID) அதுல ஒன்னு இந்த லிப்பிடுகள் எனப்படும் கொழுப்புகள்.

கொழுப்பு வகை நம்ம உடல் நலத்துக்கு நல்லது இல்லைங்கற அளவுக்கு தான் நாம கேள்வி பட்டிருப்போம். ஆனா நம்ம உடல்ல நாலுல ஒரு பங்கு இந்த லிப்பிடுகள் தான். நம்ம உடலே முழுக்க முழுக்க லிப்பிட் போர்வையை போர்த்திட்டு இருக்கு. அதனால தான் நம்மளால அதிக குளிர் இதெல்லாம் தாங்க முடியிது. மேற்கத்திய நாடுகள் குறிப்பா அமெரிக்கா ஐரோப்பா கண்டத்துல இருக்கும் மக்கள் பார்த்திங்கன்னா, நல்லா வாட்ட சாட்டமா உயரமா இருப்பாங்க. என்ன காரணம் தெரியுமா...? அங்க குளிர் காலத்துல வெப்பநிலை -20 டிகிரி வரை போகும். அவங்க அந்த அளவு குளிர் தாங்கனும் அப்படிங்கறதுக்காக அவங்க உடல்ல தோளுக்கு கீழ, நெறைய கொழுப்பு ஒரு படலமா  சேரும். அதனால, தான் அவங்க பார்க்க நல்ல திடகாத்திரமான உடல் அமைப்போட இருக்காங்க.



நம்மளோட மூளை, எல்லா நரம்பு மண்டலம், செல்லோட சவ்வு, ஒரு பகுதி விட்டமின்கள், ஒரு பகுதி அமினோ அமிலங்கள் அப்படின்னு இந்த லிப்பிடுகள் தான். -புரோட்டீன் பற்றாக்குறை, கார்போஹைட்ரேட் பற்றாக்குறை எப்படி நம்ம உடல் நலத்தை பெரிய அளவுல பாதிக்குமோ அதே மாதிரி கொழுப்பு சத்து பற்றாக்குறையும் நம்ம உடலை மிகப்பெரிய அளவுல பாதிக்கும். நாம சாப்பிடற அதிகப்படியான சத்துகள் உதாரணத்துக்கு கார்போஹைட்ரேட்கள், அதாவது குளுகோஸ் கொழுப்பா மாற்றபட்டு தான் நம்ம உடல்ல சேர்த்து வைக்கப்படுது.

லிப்பிடுகள் அப்படிங்கறது ஒரு பொதுவான பெயர். இதுல பல வகை உண்டு. கொழுப்பு அப்படின்னு சொல்லப்படறது கூட லிப்பிடுகள்ல ஒரு வகை தான். நான் உங்களுக்கு சுலபமா புரியரதுக்காக இங்க பொதுவா லிப்பிடுகள் அப்படின்னு சொல்றேன். சரியா...?

லிப்பிடுகள் ஒரு ஹைட்ரோ கார்பன் அதாவது கரிம வேதி பொருள். இது கார்பன், ஹைட்ரஜன் சேர்ந்து நீளமான செயினாவோ அல்லது ஒரு பெரிய சேர்மமாகவோ  உருவாகி இருக்கும். இந்த செயினோட முடிவுல ஏதாவது வேலை செய்யும் திறனுடைய மூலக்கூறு தொகுதி இருக்கும். இந்த வேதிப்பொருளை பொறுத்து தான் அதனோட பண்புகள் அமையும்.

இதுல இருக்க கூடிய கார்பன் அணுக்களோட எண்ணிக்கை, அதில் உள்ள மற்ற இணைவு சேர்மங்களோட பண்புகள், ஒரு கார்பன் அணு அதன் பக்கத்து கார்பனோட இணைஞ்சிருக்கும் தன்மை இதெல்லாம் பொறுத்து அதனோட வேதி பண்புகள், வினை புரியும் தன்மை இதெல்லாம் வேறுபாடும்.

இப்போ லிப்பிடுகள் அப்படின்னு பொதுவா சொன்னாலும் லிப்பிடுகள்ள நிறைய வகை உண்டு. அதுல முக்கியமானவை அப்படின்னு பார்த்தா, டிரை அசைல் கிளிசரால் - TRI-ACYL GLYCEROL , கொழுப்பு அமிலங்கள் - FATTY ACIDS , பாஸ்போ லிப்பிடுகள் PHOSPHO LIPIDS மற்றும் ஸ்டீரால்கள்-STEAROLS.  ஒவ்வொன்னையும் விளக்கமா பார்க்கலாம்.



கொழுப்பு அமிலங்கள் - FATTY ACIDS

கொழுப்பு அமிலங்கள் அப்படிங்கறது நீளமான கார்பன் செயினையும், கடைசியாக கார்பாக்சிலிக் அமில குரூப்பும் கொண்ட ஒருவகை அமிலங்கள், இதை கார்பாக்சிலிக் அமிலங்கள் அப்படின்னு சொல்லுவாங்க. அதுக்கு காரணம் இதுல இருக்கிற கார்பாக்சிலிக் தொகுதி - CARBOXYLIC GROUP (- COOH ) இது மொத்தமா, பொதுவா கொழுப்பு அமிலங்கள்  - FATTY  ACIDS  அப்படின்னு சொல்லப்படும். ஏன்னா தாவர மற்றும் விலங்கு கொழுப்புகளோட முக்கியமா உட்பொருள் இவை தான். எந்த லிப்பிட் சம்பந்தப்பட்ட எடுத்தாலும் அதுல இந்த கொழுப்பு அமிலங்கள் முக்கியமான உட்பொருளா இருக்கும்.

இதனோட முக்கியத்துவத்தை விளக்க ஒரு உதாரணம் சொன்னா இன்னும் விளங்கும். தாவர கொழுப்புகள் (தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகள் தான் நம்ம சமையல் எண்ணெய் உட்பட) சாதாரண வெப்ப நிலையில தண்ணி மாதிரி இருக்கும். இதுவே விலங்கு கொழுப்புகள் அது மாதிரி இருக்கறதில்லை. விலங்கு கொழுப்புகளை தண்ணி மாதிரி ஆக்கனும்ன்னா ஒரு அதிக வெப்பநிலையில் வெச்சி உருக்க வேண்டி இருக்கும்.

ஏன் இது மாதிரி...?  அதுக்கு காரணம், தாவர மற்றும் விலங்கு கொழுப்புகள்ள இருக்கிற இந்த கொழுப்பு அமிலங்கள் தான். நாம எண்ணெய் அப்படின்னு பொதுவா சொன்னாலும் ஒவ்வொரு தாவர எண்ணெயும், விலங்கு கொழுப்புகளும் அதனோட கொழுப்பு அமிலங்கள் உட்பொருளில் வேறுபாடும். உதாரணத்துக்கு,

CASTOR OIL - விளக்கெண்ணெய் - இதுல இருக்கிற முக்கியமான கொழுப்பு அமிலங்கள் ரிசினொலியிக் ஆசிட் -  RICINOLEIC ACID, OLEIC ACID - ஒலியிக் ஆசிட், LINOLEIC ACID - லினோலெயிக் ஆசிட்.

இதே விலங்கு கொழுப்புகளில் இருக்கிற கொழுப்பு அமிலங்கள் அப்படின்னு பார்த்தா முக்கியமான சில பாமிடிக் ஆசிட் - PALMITIC ACID, மிரிஸ்டிக் ஆசிட் - MYRISTIC ACID முதலானவை.

அவ்வளவு ஏன், இந்த கொழுப்பு அமிலங்கள் இல்லன்னா எந்த உயிரும் உயிரோடவே இருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனா ஒரு உயிருள்ள உடல், செல் அப்படின்னு எதுவுமே இருக்க முடியாது. புரியல இல்ல...? சொல்றேன்... நாம செல் பத்தி படிச்சோம். அதுல செல் சவ்வு பத்தியும் படிச்சோம். செல் சவ்வு அமைப்பு பத்தி சொல்லும்போது அதனோட இரட்டை கொழுப்பு படலம் பத்தி சொன்னேன். செல் சவ்வு கொழுப்பு படலம் அப்படிங்கறது புரோட்டீன் தலையும் கொழுப்பு அமிலம் வால் மாதிரியும்  அமைப்பு. இந்த வால் மாதிரியான அமைப்பு அப்படிங்கறது வேற ஒன்னும் இல்லை...!!! நம்ம கொழுப்பு அமிலம் தான். இந்த கொழுப்பு அமிலம் இல்லன்னா செல்லோட இரட்டை கொழுப்பு படலம் இல்லை. இரட்டை கொழுப்பு படலம் இல்லன்னா செல் சவ்வு இல்லை. செல் சவ்வு இல்லன்னா செல் கிடையாது. செல் சவ்வுமாதிரியே சவ்வை வெச்சிருக்கிற செல் உறுப்புகள் மைட்டோ காண்ட்ரியா, உட்கரு மாதிரியான செல் உறுப்புகள் இல்லை. செல் இல்லன்னா, உடல் கிடையாது. உயிர் கிடையாது. இப்போ புரியுதா...?

ஓகே.. உதாரணங்கள் போதும். மத்த தகவல்கள், விளக்கமெல்லாம் தேவைப்படற இடத்துல சேர்த்துப்போம்.

இந்த கொழுப்பு அமிலங்கள் ரெண்டு முக்கியமான வகை இருக்கு. அது,

1. SATURATED FATTY ACIDS - நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள்
2. UNSATURATED FATTY ACIDS - நிறைவுறா கொழுப்பு அமிலங்கள்



இந்த மாதிரியான வகைப்பாடு அதாவது நிறைவுற்றது, நிறைவுறாதது அப்படின்னு எதை வெச்சி சொல்றாங்க ? இது கொழுப்பு அமிலங்களோட வேதி கட்டமைப்பு வெச்சி, இதனுடைய நீளமான கார்பன் செயின்ல ஒரு கார்பன் இன்னொரு கார்பனோட எப்படி, எத்தனை பிணைப்புகளை வெச்சி இணைஞ்சிருக்கு அப்படிங்கறதை வெச்சி இது மாதிரி வகைபடுத்தி இருக்காங்க.

SATURATED FATTY ACIDS - நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள்

நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் நீளமான கார்பன் செயினும் கடைசியில் கார்பாக்சிலிக் அமில தொகுதியும் கொண்டது. பல நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் இருந்தாலும் இந்த ஒற்றுமை (கார்பன் செயினும், கார்பாக்சிலிக் தொகுதியும் பொதுவானவை ) இவை எல்லாம் ஒண்ணுக்கொண்ணு கார்பன் எண்ணிக்கையில மட்டும் வேறுபாடும். ஒரு கார்பன் இன்னொரு கார்பனோட ஒற்றை பிணைப்பு மூலமா இணைஞ்சிருக்கும். இதுல இரட்டை பிணைப்பு, மூன்று பிணைப்புகள் எதுவும் இருக்காது. இந்த ஒற்றை பிணைப்புகள் (COVALANT BOND )  அதிகமா சக்திகொண்டவை. உடைக்க மிக அதிகமான சக்தியை செலவழிக்க வேண்டி இருக்கும். இதுமாதிரியான கொழுப்பு அமிலங்கள் இருக்கறதாலதான் விலங்கு கொழுப்புகள் உருக்க அதிக வெப்ப நிலையில வெச்சி உருக்கறாங்க. உதாரணம் -

1. ஹெபடாடெகனாயிக் ஆசிட் - HEPATADECANOIC ACID - இது ஒரு செயற்கை
    கொழுப்பு அமிலம்.
2. பியூடனாயிக் ஆசிட் - BUTANOIC ACID - வெண்ணை, நெய் மாதிரியான
  விலங்கு கொழுப்புல இருக்கும். இந்த கொழுப்பு பொருள்கள் கெட்டு
  போயிட்டா வரும் விரும்பத்தகாத நாற்றத்துக்கு இவை தான் காரணம்.
3. கேப்ரிக் ஆசிட் - CAPRIC ACID - விலங்கு கொழுப்புகள்ள இருந்து
    தயாரிக்கப்படர எண்ணெய்  பொருட்கள்ல இவை இருக்கும்.
4. பாமிடிக் ஆசிட் - PALMITIC ACID - விலங்கு மாமிசத்துல இருக்கும் கொழுப்பு
   அமிலம்.

நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் - UNSATURATED FATTY ACIDS 

நிறைவுறா குழுப்பு அமிலங்கள் அப்படிங்கறது கொழுப்பு அமிலங்கள்ள பொதுவா இருக்கும் கார்பன் செயின்ல இரட்டை பிணைப்புகளையும், மூன்று பிணைப்புகளையும் கொண்டது.  இந்த ரெட்டை பிணைப்புகள் அதிக சக்தியை கொண்டிருக்காது. சாதாரண அரை வெப்பநிலையிலேயே மாறக்கூடியவை. அதிகமா தாவர கொழுப்புகள்ள இருக்கும். அதனாலதான் தாவர எண்ணெய்கள் சாதாரண வெப்ப நிலையிலேயே தண்ணி மாதிரி இருக்கும். அதிக சக்தி தேவை இல்லாததால ஈசியா ஜீரணம் ஆக கூடியவை.

நாம சாப்பிடும் சாப்பாடு அதிகமான நிறைவுறா கொழுப்பு அமிலங்களை கொண்டதா இருந்தா நமக்கு நல்லது. ஏன்னா, இவை குறைந்த சக்தியை உபயோகபடுத்தி ஜீரணம் ஆகி, அதிகமான சக்தியை வெளியிடும். இதுல இருக்கிற இரட்டை, மூன்று பிணைப்புகள் எண்ணிக்கை பொறுத்து இது மோனோ - MONO UNSATURATED FATTY ACID ) , டை - DI UNSATURATED FATTY ACID) , டிரை - TRI UNSATURATED FATTY ACID) நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், அதுக்கும் மேல போனா பாலி - (POLY UNSATURATED FATTY ACIDS )  நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அப்படின்னு சொல்லுவாங்க.



உதாரணம், PALMITOLEIC ACID - பாமிடொலியிக் ஆசிட், ஒலியிக் ஆசிட் - OLEIC ACID, லினோலெயிக் ஆசிட் - LINOLEIC ACID.

டிரை அசைல் கிளிசரால் - TRI-ACYL GLYCEROL

டிரை அசைல் கிளிசரால் என்பன கொழுப்பு வகைகளில் மிக மிக எளிய கொழுப்புகள். இது கிளிசராலும் கொழுப்பு அமிலங்களும் இணைஞ்சி உருவானவை. இருக்கிற அத்தனை டிரை அசைல் கிளிசரால்லயும் கிளிசரால் அப்படிங்கறது பொதுவான வேதி பொருள். இந்த கிளிசராலோட வேற வேற மூன்று அல்லது ஒரே மாதிரியான மூணு கொழுப்பு அமிலங்கள் சேர்ந்து இருக்கும். இது தான் டிரை அசைல் கிளிசராலோட வேதி கட்டமைப்பு.

           1 கிளிசரால் + 3 கொழுப்பு அமிலங்கள் = டிரை அசைல் கிளிசரால்


டிரை அசைல் கிளிசரால் நம்ம செல்லுக்குள்ளயே அப்பப்போ தேவைப்படும் பொது தயாரிக்கப்படும்.அளவுக்கு அதிகமா உருவாகிற டிரை அசைல்  கிளிசரால் சைட்டோ பிளாசத்துல கொழுப்பாக சேமித்து வைக்கப்படும். அதுலயும் கல்லீரல் செல்கள், மூளை செல்கள், நரம்பு செல்கள் இதுல எல்லாம் இது அதிகமா இருக்கும். லிப்பிடோட எல்லா வகைகளிலும், கொழுப்பு அமிலங்களும், டிரை அசைல் கிளிசராலும் பொதுவான மூலப்பொருள். இது இல்லாத கொழுப்பு வகைகள் கிடையவே கிடையாது.

PHOSPHO LIPIDS - பாஸ்போ லிப்பிடுகள் 

பாஸ்போலிப்பிடுகள் என்பதும் லிப்பிடுகளோட ஒரு வகை. செல் சவ்வினுடைய கொழுப்பு இரட்டை படலம், செல் சுவர் எல்லாத்துலயும் இருக்கும் முக்கியமான மூலபொருள்/உட்பொருள் எல்லாம் இது தான். இதனோட முக்கியமான உட்பொருள்கள் ஒரு கிளிசரால், ரெண்டு கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒரு பாஸ்போ தொகுதி.

1 கிளிசரால் + 2 கொழுப்பு அமிலங்கள் + 1 பாஸ்போ தொகுதி = பாஸ்போ லிப்பிடுகள்

இதுல இருக்கும் கொழுப்பு அமிலங்கள் பாஸ்போ லிப்பிடுகளோட வேற வேற உட்பிரிவை பொறுத்து வேறுபாடும். இதனோட முக்கியமான ரெண்டு வகைப்பாடுகள்,

 1. டை அசைல் கிளிசரைடு (அ) கிளிசரோ பாஸ்போ லிப்பிடு - DI ACYL GLYCERIDE (OR) GLYCERO PHOSPHO LIPID. இந்த வகைப்பாடுக்கு இன்னும் உட்பிரிவுகள் இருக்கு. இன்னும் விளக்கமா எல்லாம் போக வேண்டாம். இதனோட பயன்பாடுகள் எங்க எல்லாம் இருக்குன்னு மட்டும் தெரிஞ்சிப்போம்.
  • PHOSPHATIDIC ACID - பாஸ்பாடிடிக் ஆசிட் 
  • PHOSPHATIDYL ETHANOLAMINE - பாஸ்பாடிடைல் எத்தனாலமைன்
  • PHOSPHATIDYL CHOLINE - பாஸ்பாடிடைல் கோலைன் 
  • PHOSPHATIDYL SERINE  - பாஸ்பாடிடைல் சிரைன் 
  • PHOSPHOINOSITIDES - பாஸ்போ இனோசிடைட்கள்  - இதுக்கு மட்டும் இன்னும் உட்பிரிவுகள் இருக்கு.
2. பாஸ்போ ஸ்பிங்கோ லிப்பிடு- PHOSPHOSPHINGOLIPID

பாஸ்போ ஸ்பிங்கோ லிப்பிட் பாஸ்போ லிப்பிடோட உட்பிரிவுகள்ள ஒன்னு. இதுக்கு இன்னும் தனி உட்பிரிவுகள் இருக்கு.

  • செரமைட்  பாஸ்பாரைல் கோலைன் - ஸ்பிங்கோ மைலின்  - CERAMIDE PHOPHARYLCHOLINE - SPHINGOMYLIN 
  • செரமைட்  பாஸ்பாரைல் எத்தனால் அமைன் - CERAMIDE PHOPHARYL ETHANOLAMINE 
  • செரமைட் பாஸ்பாரைல் கிளிசரால் - CERAMIDE PHOSPHARYL GLYCEROL 


இதனோட உட்பிரிவுகள் பத்தி எல்லாம் விளக்கமா இப்போ எதுவும் சொல்லல. ஏதாவது ஒரு இடத்துல தேவைப்படும்போது சொல்லிக்கலாம். ஏன்னா ஏற்கனவே பதிவோட ஆரம்பத்துல இருந்து நெறைய புது பெயர்கள், புது விஷயங்கள் அப்படின்னு சொல்லிட்டே இருக்கேன். ஒரேயடியா திணிச்சா எல்லாம் கொழம்பிடும். அதனால சும்மா வகைபாடுகளோட பெயர்களோட சின்ன விஷயங்கள் மட்டும் சொல்லி நிறுத்திக்கறேன்.

பொதுவா பாஸ்போ லிப்பிடுகள் செல் சவ்வுல இரட்டை கொழுப்பு படலம் உருவாக்கத்துல முக்கிய பங்கு வகிக்கறதை ஏற்கனவே சொல்லி இருக்கேன். செல்லுக்கு செய்திகள் கொண்டு வரும் புரோட்டீன்கள் செல்லுக்கு வெளியவே நின்னுக்கிட்டு செய்தியை மட்டும் சிக்னலா உள்ள அனுப்பும். இப்படி உள்ள அனுப்பபடர சிக்னலை உட்கருவுக்கு கடத்துற வேலையை ஆரம்பிக்கும் ஒரு பொருள் இருக்கு. இதுக்கு 2nd MESSANGER - 2nd மெசேஞ்சர் அப்படின்னு பேரு. வர சிக்னலை பொறுத்து வேற வேற 2nd மெசேஞ்சர் இந்த வேலையை செய்யும். அதுல ஒரு 2nd மெசெஞ்சர் நம்ம பாஸ்போ லிப்பிட் தான். உதாரணம் PHOSPHATIDYL INISOTOL (4, 5) BISPHOPHATE (PIP2)



ஓகே....லிப்பிட் பத்தி சொல்ல இன்னும் நிறைய இருக்கு. ஆனா, பதிவு ஏற்கனவே ரொம்ப நீளமா போயிடுச்சி. நான் இங்கயே நிறுத்திக்கறேன். மீதி அடுத்த பதிவுல சொல்றேன். ஸோ, மக்களே அடுத்த பதிவுல சிந்திப்போம்...!!!











1 comment: