Wednesday, July 4, 2012

செல் அமைப்பு: CELL WALL - STRUCTURE - செல் சுவர் அமைப்பு விரிவான பார்வை - 2

மக்களே...!!!

செல் சுவரை பத்தின பதிவு எப்படி இருந்தது? உபயோகமா இருந்து  இருக்குன்னு நம்பறேன். ஆனா, செல் சுவரை பத்தின தகவல்களை இன்னும் நான் இன்னும் முழுமையா சொல்லி முடிக்கல. தாவர செல் உட்பட, செல் சுவர் அப்படிங்கறது பொதுவா இருந்தாலும், ஒவ்வொரு செல்லுக்கும், செல் சுவரோட வேதியியல் கட்டமைப்பு வேறுபாடும். இதை போன பதிவுலயே சொல்லி இருந்தேன். ஆனா, பதிவோட நீளம் அனுமதிக்காததால அதுக்கான விளக்க படங்கள் நிறைய போட முடியல. அதனால இன்னொரு தனி பதிவா போட முடிவு பண்ணினேன். போன பதிவுக்கான உங்க பின்னூட்டத்துக்காக காத்துட்டு இருக்கேன்.

பின் தொடர்பவரா இல்லைன்னாலும் நெறைய பேரு நம்ம வலைப்பூவுக்கு தினம் தினம் தவறாம வந்து போறீங்க. ரொம்ப சந்தோசம். இனிமே என்ன வேலை பளுவா இருந்தாலும் வாரம் ஒரு பதிவு கண்டிப்பா போட முயற்சி பண்றேன். இப்போ பதிவுக்கு போகலாம்.

செல் சுவர் - கட்டமைப்பு - CELL WALL - STRUCTURE

தாவர செல், பேக்டீரியா, பூஞ்சைகள் இப்படி எல்லா செல்களுக்கும் செல் சுவர் இருக்கு. ஆனா இந்த செல்களை பார்த்திங்கன்னா, ஒன்னு தாவரம், இன்னொன்னு பூஞ்சை, இன்னும் ஒன்னு பேக்டீரியா. இந்த செல்கள் ஒவ்வொன்னும் ஒரு மாதிரி. வேற வேற இனம். அதனால ஒரு செல் இன்னொன்னு மாதிரி இருக்காது. அப்போ இதுல இருக்கிற செல் சுவர் எப்படி இருக்கும்...? ஒரே மாதிரி தான் இருக்குமா...? இல்லை வேற வேற மாதிரி இருக்குமா அப்படின்னு அதனோட கட்டமைப்பை பார்த்தப்போ தான் அதுல இருக்கிற வித்தியாசங்கள், அதனோட வேதியியல் தன்மைகள், எல்லாம் வெளிய தெரிஞ்சது. 

செல் சுவர்  - தாவர செல் - CELL WALL - PLANT CELL

சின்ன வயசுல இருந்து படிச்சது தான். செல் சுவர் செல்லுலோசால் ஆனது. தாவர செல் சுவர் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. செல் சவ்வு, அதன் மேல்புறம் உண்மையான செல் சுவர், அதன் மேல்புறமாக லேமேல்லா எனப்படும் பகுதி.

செல் சவ்வு நாம் முன்னமே பாத்த மாதிரி கொழுப்பு இரட்டை படலம். அதன் மேற்புறமா இருக்கிற செல் சுவர் செல்லுலோசை அடிப்படை தூண்களா கொண்டது. நிறைய செல்லுலோஸ் ஒண்ணா சேர்ந்து வலிமையான குழாய்கள் மாதிரியான அமைப்பா மாறியிருக்கும்.. இந்த அமைப்புகள் பெக்டின்-PECTIN அப்படிங்கற கார்போஹைட்ரெட் செயின் மற்றும் கிளைக்கன் அப்படிங்கற கார்போஹைட்ரெட் செயின் இந்த ரெண்டு செயின்களால மிக வலிமையா பிணைக்கப்பட்டு இருக்கும்.



 பெக்டின் அப்படிங்கறது கேலட்டியூரோனிக்  ஆசிட் - GALACTURONIC ACID நீளமான செயின் மாதிரி இணைந்த அமைப்பு. அதாவது, அடிப்படை கேலக்டோஸ்ல ஒரு ஆசிட் குரூப் அதிகப்படியா கொண்டது. கிளைக்கன் அப்படிங்கறது ஆக்சிஜன் மூலமா பிணைக்கப்பட கூடிய ஏதாவது ஒரு கார்போஹைட்ரெட் செயின்.  இந்த பிணைப்பு பத்தி சொல்ல ஒரு விஷயம் இருக்கு, அதை அப்புறமா பார்க்கலாம்.




செல்லுலோஸ் அப்படிங்கறது குளுக்கோஸால் ஆனது. இதை நாம நம்மளோட கார்போஹைட்ரெட் பதிவுல பார்த்திருக்கோம். குளுக்கோஸ் மூலக்கூறுகள் இணைஞ்சி பாலி-சாக்ரைடு  உருவாகறதுல சில பிணைப்புகள் இருக்கு. அதாவது ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு இன்னொரு குளுக்கோஸ் மூலக்கூறோட எப்படி இணைஞ்சிருக்கு அப்படிங்கறதுல நாம கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு. உதாரணத்துக்கு, குளுக்கோசை தண்ணியில போட்டா உடனடியா கரைஞ்சிடும். ஆனா, குளுக்கோஸ் மூலக்கூறுகளால ஆன ஸ்டார்ச்சை அல்லது செல்லுலோசை தண்ணியில போட்டா கரையாது. அதே மாதிரி குளுக்கோஸால் ஆன ஸ்டார்ச் கொஞ்சம் மிருதுவா இருக்கும். ஆனா, செல்லுலோஸ் கடினமா இருக்கும் . எல்லாமே ஒரே குளுகோஸ் தான் ஆனா ஒவ்வொரு இடத்துலயும் வேற வேற தன்மை கொண்டிருக்கு. இது ஏன் ...?



ஏன்னா, குளுகோஸ் அப்படிங்கறது ஒண்ணா இருந்தாலும் அது இன்னொரு குளுக்கோஸ் மூலகூறோட எப்படி இணைஞ்சிருக்கு அப்படிங்கறதுல தான் விசயமே இருக்கு. இதை பத்தியும் நம்மளோட கார்போஹைட்ரெட் பதிவுல ஒரு முன்னோட்டம் மாதிரி குடுத்திருக்கேன். இன்னும் ஒரு புது பதிவுல விளக்கமா சொல்றேன். இப்போ நாம நம்ம விசயத்துக்கு வருவோம். தாவர செல்லோட செல் சுவர் செல்லுலோஸ் அப்படிங்கற குளுக்கோஸ் மூலக்கூறுகளை அடிப்படையா கொண்ட பாலி சாக்ரைடால் ஆனது. இந்த செல்லுலோஸ் பல குளுக்கோஸ் மூலக்கூறுகள் நீளமா செயின் மாதிரி இணைஞ்சி உருவானது.  இந்த பிணைப்புகளை உடைக்க நல்ல செறிவூட்டப்பட்ட ஆசிட் போடணும் அல்லது இதை 320 டிகிரி வரை சூடாக்கினா மட்டுமே இது தனிதனி குளுக்கோஸா உடையும். ஸ்டார்ச்சை 60 - 70 டிகிரி சூடாக்கினாலே போதும். வெறும் குளுக்கோசை பச்சை தண்ணியில போட்டாலே போதும்.


பூஞ்சைகளின் செல் சுவர் - FUNGAL CELL WALL

பாலி-சாக்ரைடுகளால ஆன செல் சுவருக்கு இன்னொரு உதாரணம் இந்த பூஞ்சைகளோட செல் சுவர். பூஞ்சைகள் ஒரு தனி வகை. தாவரம், விலங்குன்னு உயிரினங்கள் பிரியும் போது, பூஞ்சைகளும் ஒரு தனி பிரிவா உருவானது. விலங்கு செல்களோட தன்மையும், தாவர செல்களோட தன்மையும் தனக்குள்ள கொண்டது. ஆனா, இதுல ஒரு ஸ்பெசல் தன்மை உண்டு. இது பாலி-சாக்ரைடா இருந்தாலும் இது ஒரு அசாதாரணமானது. இது செல்லுலோஸ் மாதிரி குளுக்கோஸா இல்லாம, குளுக்கோஸமைன் - GLUCOSAMINE அப்படிங்கற குளுக்கோஸ் DERIVATIVE - வை நீளமான செயின் மாதிரி கொண்டது. DERIVATIVE அப்படினா அடிப்படையா இருக்கும் வேதி பொருளோட எக்ஸ்ட்ராவா ஏதாவது ஒரு வேதி மூலக்கூறு சேர்ந்திருக்கும். இந்த குளுக்கோஸமைன் வேதி பொருள்ல  அடிப்படையா இருக்கும் குளுக்கோஸ் கூட ஒரு அமினோ குரூப் எக்ஸ்ட்ராவா இருக்கும். அமினோ குரூப் எக்ஸ்ட்ராவா இருக்கறதால இது  குளுக்கோஸமைன் அப்படின்னு சொல்லப்படுது. இந்த பாலி சாக்ரைடுக்கு கைட்டின் - CHITIN அப்படின்னு பேரு.


வண்டு எனப்படும் பூச்சி இனங்கள் நமக்கு தெரியும். அதனோட மேல்புற இறக்கை நல்லா கடினமா ஓடு மாதிரி இருக்கும் கவனிச்சிருக்கிங்களா? இந்த ஓடு மாதிரி இருக்கிற இறக்கை கைட்டினினால் ஆனது தான். 

மக்களே, நான் சொல்ல வேண்டிய விஷயங்கள் இன்னும் ஒரு தனி பதிவு போடற அளவுக்கு இருக்கு.. ஸோ, நான் இன்னைக்கு பதிவு இதோட முடிச்சிக்கறேன்.  இன்னும் பேக்டீரியாவோட செல் சுவர் அமைப்பும், அதுல இருக்கிற ரெண்டுவகைகளையும் பத்தி அடுத்த பதிவுல பார்க்கலாம். அதோட,
கிளைக்கோ புரோட்டீன்கள் அப்படின்னும் ஒரு வகை இருக்கு. இது ஆர்க்கியே பேக்டீரியா வகை பேக்டீரியாவோட செல் சுவர்ல இருக்கும். இது அப்படியே பெப்டிடோ கிளைக்கன் வகையோட தலைகீழ். அதாவது நீளமான புரோட்டீன்ல சிறு சிறு கார்போஹைட்ரெட் செயின்கள் இணைஞ்ச அமைப்பு. 

ஆனா, பதிவு நீளமா போறதால இதை பத்தி வேற ஒரு தனி பதிவுல விளக்கமா பார்க்கலாம். அடுத்த பதிவுல சிந்திப்போம்...!!!

No comments:

Post a Comment