Thursday, April 19, 2012

செல் அடிப்படை கட்டமைப்பு - கார்போஹைட்ரேட்ஸ் - சர்க்கரை - carbohydrates

நண்பர்களே,
செல்  அமைப்பு பத்தின பதிவுதான் என்னோட அடுத்த பதிவுன்னு நெனச்சிருந்தேன். ஆனா அதுக்கு தேவையான படங்களை ரெடி பண்றது தாமதமான காரணத்தினாலயும், பதிவிடறது எதுக்காகவும் நிறுத்தகூடாது அப்படிங்கிறதால இந்த பதிவு உங்களுக்காக. இதையொட்டி வரப்போற அடுத்த பதிவு ரொம்ப சுவாரஸ்யமான விசயங்களை உள்ளடக்கியதாகவே இருக்கும். 

கார்போஹைட்ரேட்ஸ் என்பது நம்ம செல்லுக்கு தேவையான சக்தி தயாரிக்க தேவைப்படும் ஒரு முக்கியமான அடிப்படை வேதி பொருள், இன்னும் சரியா சொல்லனும்ன்னா கரிம வேதி பொருள். (தன்னோட உள்கட்டமைப்பில் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை கொண்ட வேதி பொருள்கள் எல்லாமே கரிம வேதி பொருள்கள் அப்படின்னு சொல்லுவாங்க) இது இந்தியாவில் பயன்படுத்தப்படும் பொருள்கள்ல அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, மரவள்ளி, சர்க்கரைவள்ளி மாதிரியான உணவுகளில் இருந்து நெறைய கிடைக்குது. 

சர்க்கரை அல்லது கார்போஹைட்ரேட்ஸ் அப்படிங்கிறது ஒரு பொதுவான பெயர்தான். கார்போஹைட்ரேட்ஸ் அதோட கட்டமைப்பு மாதிரியான சில விசயங்களை பொறுத்து வேற வேற மாதிரி நிறைய வகைப்படுத்துவாங்க. ஆனா அடிப்படை படிக்கிற நமக்கு இப்போ அது எல்லாம் வேண்டாம். சில முக்கியமான வகைகளை மட்டும் பார்க்கபோறோம். 

கீழே இருக்கும் வகை அதுல இருக்கும் ஒற்றை சக்கரையோட எண்ணிக்கை பொறுத்து அமையும்.

1  . ஒற்றை சர்க்கரை - மோனோ சாக்ரைடு   - Monosaccharide 
2 . இரட்டை சர்க்கரை - டை சாக்ரைடு  - disaccharide 
3 . பல சர்க்கரை (தமிழாக்கம் சரியா? )- பாலி சாக்ரைடு - Polysaaccharide 

ஒற்றை சர்க்கரை - மோனோ சாக்ரைடு   - MONOSACCHARIDE 

இதில் ஒரே ஒரு சர்க்கரை மூலக்கூறு மட்டுமே இருக்கும். உதாரணம் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ். நாம கடையில் வாங்கும் குளுக்கான் டி இந்த குளுக்கோஸ் தான். பிரக்டோஸ் இந்த இந்த குளுக்கோஸ் மாதிரியே இருக்கும் ஆனால் அதன் கட்டமைப்பிலும் சுவையிலும் வேறுபாடும். ரெண்டுமே இனிப்பா இருந்தாலும், இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ரெண்டு விதமான இனிப்பு எப்படின்னு குழப்பமா இருக்கா? குளுக்கோசை விட பிரக்டோஸ் இனிப்பு சுவை அதிகம் உடையது. உதாரணம் தேன் மற்றும் பேரிச்சை - இந்த இரண்டும் பிராக்டோசை கொண்ட உணவு பொருள்கள்.  மத்த இனிப்புக்கும் இந்த ரெண்டு இனிப்புக்கும் இருக்கற வேறுபாடு இப்போ புரியுதா?


   
  
C - கார்பன் அணு      H - ஹைட்ரஜன் அணு          O - ஆக்சிஜன் அணு 

மேல இருக்கும் படத்தை பார்த்திங்கன்னா இரண்டுமே, ஒற்றை சர்க்கரையாவே இருந்தாலும் அதன் அடிப்படை கட்டமைப்பில் இருக்கும் வித்தியாசம் புரியும். இடதுப்பக்கம் இருக்கற படம் ஒரு நேர்க்கோட்டு அடிப்படையில (LINEAR FORM ) எழுதற முறை. வலது பக்கம் இருக்கறது வட்ட வடிவம் (RING STRUCTURE FORM). 

ஒற்றை சர்க்கரையில் இருக்கும் கார்பன் அணுக்களோட எண்ணிக்கையை பொறுத்து கூட ஒரு வகைப்பாடு உண்டு. ஆறு கார்பன்களை கொண்டதால இந்த ரெண்டும் ஹெக்சோஸ் (HEXOSE) அப்படின்னு அழைக்கப்படும்). இதை இதோட நிறுத்திப்போம். குளுகோசுக்கும், பிரக்டோஸ்சுக்கும் இருக்கற அடிப்படை வித்தியாசம் தெரிஞ்சா போதும்.

இரட்டை சர்க்கரை - டை சாக்ரைடு  - DISACCHARIDE

ஒரு இரட்டை சர்க்கரை அப்படிங்கறது, ரெண்டு ஒற்றை சர்க்கரைகளை தன்னோட கட்டமைப்பில் கொண்டது. இதுக்கு உதாரணம் சுக்ரோஸ் (SUCROSE). சுக்ரோஸ் அப்படின்னா ஒன்னுமில்லைங்க, பேருதான் என்னமோ பெருசா வித்தியாசமா இருக்கே தவிர, இது நம்ம வீட்ல பயன்படுத்தற சாதாரண சர்க்கரை தான். இதோட கட்டமைப்பில் ஒரு க்ளுகோஸ்சும் ஒரு பிரக்டோஸ்சும் இருக்கு.    

இதுக்கான நேர்க்கோட்டு வடிவ அமைப்பு படம் கெடைக்கல.  இது ரிங் அமைப்பு. அதோட சில ரெட்டை சர்க்கரைகான படமும் கெடைச்சது. அதுல பார்த்திங்கன்னா, ஒரு ஒற்றை சர்க்கரை இன்னொரு ஒற்றை சர்க்கரையோட பிணைக்கப்பட்டு இருக்கிற விதம் வேறுபடறது தெரியும். அதுலயும் நெறைய சுவாரஸ்யமான விஷயம் இருக்கு. அதைப்பத்தி இன்னொரு நாள் விரிவா பார்க்கலாம். 

இரட்டை சர்க்கரையில் லாக்டோஸ் (LACTOSE )அப்படிங்கறது பாலில் இருக்கும் ஒரு வகையான இரட்டை சர்க்கரை. அதுல குளுக்கோசும் கேலக்டோஸ் (GALACTOSE) அப்படிங்கிற ஒரு ஒற்றை சர்க்கரையும் பிணைக்கப்பட்டு இருக்கும்.   

இங்க நமக்கு ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு. இந்த லாக்டோஸ் அப்படிங்கற இந்த சர்க்கரை வளர்ந்த மனிதனின் உடலில் ஜீரணம் ஆகாது. ஆனா, அதே மனிதன் குழந்தையா இருக்கும் போது ஜீரணம் ஆகிட்டு தான் இருந்து இருக்கும். ஏன்னா, குழந்தைகளுக்கு, பால் தான் முக்கியமான உணவு. அதுவே வளர்ந்த மனிதனுக்கு அப்படி இல்லை. அதனால லக்டோசை ஜீரணம் பண்ற லாக்டேஸ் (LACTASE ) அப்படிங்கற ப்ரோடீன் உருவாகறது அந்த குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனதும் நின்னு போயிடும். ஏன்னா, வளர்ந்த மனிதனுக்கு பால் ஒரு முக்கியமான உணவு இல்லை. (இதுவும் இயற்கையும் படைப்பில் ஒரு வித்தியாசமான விஷயம்). நாம சாப்பிடற பால்ல இருக்கிற லாக்டோஸ் கழிவாக வெளியேறி விடும். 

இங்க ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. அதாவது ஒரு உயிருள்ள செல்லுக்குள்ள, அந்த ஒரு வேதி பொருளையும் உடைக்க, அதாவது ஜீரணம் பண்ண அல்லது தனிதனியா இருக்கும் வேதி பொருட்களை பிணைக்க தேவையான ப்ரோடீன் எல்லாத்தையும் என்சைம் (ENZYME) அப்படின்னு கூப்பிடுவாங்க. எல்லா என்சைம்களும் ப்ரோடீன்களே. ஆனா, எல்லா ப்ரோடீன்களும் என்சைம்கள் கிடையாது. என்சைம் அல்லாத ப்ரோடீகள் நெறைய இருக்கு. 

இந்த என்சைம்கள் பத்தி இன்னொரு நாள் விரிவா பேசுவோம். அதே மாதிரி இப்போ நாம உயிர் வேதியியல் படிக்க ஆரம்பிச்சிட்டோம். அதனால இனிமே முறைப்படி எதை எந்த பேரு வெச்சி கூப்பிடனுமோ அதை அந்த பேரு வெச்சே கூப்பிடுவோம். இனிமே, என்சைம்களை என்சைம் அப்படின்னே கூப்பிடுவோம். இனிமேல் என்சைம் அல்லாத ப்ரோடீகளை மட்டும் ப்ரோடீன் அப்படின்னு கூப்பிடுவோம்.    

 


குறிப்பு - மால்டோஸ் (MALTOSE ) அப்படிங்கறது சில தானிய வகைகள்ல இருக்கிற ஒரு ரெட்டை சர்க்கரை. மால்ட் தயரிப்புகள்ள எல்லாம் இது இருக்கும். க்ளுகோஸ் தான் இதனோட மூலப்பொருள். ஈசியா ஜீரணம் ஆக கூடியது. 

 பாலி- சாக்ரைடு - POLY - SACCHARIDES 

 பாலி சாக்ரைடு என்பது பல கணக்கில் அடங்காத ஒற்றை சர்க்கரைகள் ஒன்றோடு ஒன்று இணைந்த அமைப்பு. இந்த வகையான சர்க்கரைகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிட்ட ஒற்றை சர்க்கரைகளை நம்ம செல்லுக்குள்ள சேர்த்து வைக்க நம்ம செல் பயன்படுத்துது. 

இப்போ நாம் சாப்பாடு நல்ல இருக்கேன்னு ஒரு வெட்டு வெட்டிட்டோம்ன்னு வெச்சிக்கோங்க. ரத்தத்துல அளவுக்கு அதிகமான க்ளுகோஸ் சேர்ந்திடும். அப்படி சேருவது நமக்கு ஆபத்து. நம்ம ரத்தத்துல இருக்க வேண்டிய க்ளுகோஸ்சுக்குன்னு ஒரு லிமிட் இருக்கு. அந்த லிமிட்டுக்கு மேலவும் போக கூடாது. குறையவும் கூடாது. அதனால, நம்ம செல்கள் ரத்தத்துல இருக்கிற அளவுக்கு அதிகமான குளுகோஸை ஒன்னுக்கொன்னு சேர்த்து ஒரு நீண்ட செயின் மாதிரி மாத்தி செல்லுக்குள்ள சேர்த்து வெச்சிக்கும். இது தான் பாலி சாக்ரைடு. 

இப்போ சில பாலி சாக்ரைடுகள் உங்க பார்வைக்கு. 

ஸ்டார்ச் - STARCH 

இதபத்தி நமக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும். அளவுக்கு அதிகமான குளுகோஸ் மூலக்கூறுகளை நீண்ட செயின் மாதிரி சேர்த்தா நம்ம ஸ்டார்ச் ரெடி. உதாரணம் நம்ம ஜவ்வரிசி. மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் மாவை சிறுசிறு உருண்டைகளாக ஆக்கி, வறுத்து, நல்ல வெய்யிலில் உலர வைத்தால் ஜவ்வரிசி ரெடி.  

ஆனால், தாவரங்கள் மட்டுமே, குளுகோஸை ஸ்டார்ச் மூலமாக சேர்த்து வைக்கும். முக்கியமாக கிழங்கு வகை தாவரங்கள். 

 

நன்றி - scientificpsychic.com

மேல இருக்கிற படம் ஸ்டார்ச் அமைப்பு. நீளமாவோ  (2000 - 20000 க்ளுகோஸ் மூலக்கூறுகள் வரை )  இல்லை நீளமா உருவாகிட்டு போற   குளுகோஸ் செயின்ல இருந்து கிளை செயின்களும் உருவாகும். ஆனா கிளைகள் உருவாகறது, அது மிக குறைவா நிகழும். அதே மாதிரி ஒரு குளுகோஸ் இன்னொரு குளுகோஸ்சுடன் பிணைக்கப்பட்டிருக்கிற முறையையும் நோட் பண்ணுங்க.


கிளைக்கோஜன் - GLYCOGEN 

கிளைக்கோஜன் என்பது விலங்குகளில் இருக்கும் பாலி சாக்ரைடு. தாவரங்களில் ஸ்டார்ச் மாதிரி. ஸ்டார்ச்சுக்கும் கிளைக்கோஜனுக்கும் உள்ள வேறுபாடு ரெண்டுதான். ஒன்னு தாவரங்களிலும் மற்றது விலங்கிலும் சர்க்கரையை சேர்த்து வைக்கும் முறை. இன்னொரு வித்தியாசம் அளவு. கிளைக்கோஜன் மிக அதிகமான கிளை செயின்களை உருவாக்கும். அதன்மூலமா நிறைய பெரிய அளவுல சர்க்கரையை சேர்த்து வைக்கும். மற்றபடி க்ளுகோஸ் பிணைத்திருக்கும் முறை எல்லாம் ஒண்ணுதான். 

செல்லுலோஸ் - CELLULOSE 

இது தாவரங்கல்லில் இருக்கிற இன்னொரு முக்கியமான ஒன்னு. நாம ஸ்கூல்ல எல்லாம் மனப்பாடம் பண்ணியிருப்போம். செல் சுவர் செல்லுலோசால் ஆனது அப்படின்னு. ஆமா மக்களே, தாவர செல்லுல இருக்கிற செல் சுவர் (இது தான் தாவர உடல் மிக கடினமா இருக்க காரணம். விலங்கு செல்லில் இது இல்லாத காரணத்தால் தான் விலங்குகளின் உடல் மிருதுவா இருக்கு.


செல்லுலோசும் க்ளுகோஸ் செயின் மாதிரி இணைந்த அமைப்பு தான். ஆனா குளுகோஸை பிணைக்கப்பட்டு இருக்கிற பிணைப்பு வேற மாதிரியானது. மேல இருக்கிற படத்தில பார்க்கலாம். கீழேயும் பார்க்கலாம். 

 
நன்றி - http://turon.com 

நாம சாப்பிடும் சாப்பாட்டில் இருக்கிற பாலி சாக்ரைடு (ஸ்டார்ச் அல்லது கிளைக்கோஜன் ) கொண்டிருக்கிற குளுகோஸ் மூலக்கூறுகளை பிணைத்திருக்கும் பிணைப்பை உடைத்து, தனித்தனி குளுக்கோஸா மாத்தற நிகழ்வு தான் சாப்பாடு ஜீரணம் ஆகறதுன்னு நாம சாதாரணமா சொல்றது. ஆனா,  அந்த பிணைப்புகளை உடைக்கிறது சாதாரண விஷயம் இல்லை. அந்த பிணைப்புகளுக்கு ஏத்தமாதிரி, தனிதனி என்சைம் தேவை. 

செல்லுலோஸ் தாவரங்கள்ள மட்டும் இருக்கிற ஒரு பாலி சாக்ரைடு. இந்த செல்லுலோசுக்கு செல்லுலேஸ் (CELLULASE) அப்படிங்கிற என்சைம் இருந்தாதான் இதை ஜீரணிக்க முடியும். 

இதோட இன்னிக்கு நம்மை பதிவை முடிக்கிறோம். ஏற்கனவே ரொம்ப நீளமான பதிவா போயிடுச்சி. அப்புறம் போரடிக்க ஆரம்பிச்சிடும். ஸோ, இந்த செல்லுலோசை பத்தின ஒரு முக்கியமான சுவாரஸ்யமான விசயத்தோட அடுத்த பதிவுல சிந்திப்போம்.

4 comments:

  1. ஸ்ரீதர்September 8, 2012 at 8:01 AM

    சார்,உங்கள் வொர்க் மிக மிக அருமை..பிரதிபலன் பாராத இந்த பணி உங்கள் பரந்த மனப்பான்மையை காட்டுகிறது..தினமும் உங்கள் பதிவுகளை பார்க்காமல் இனி நான் தவறபோவதில்லை...வேறு யாரும் இப்படி உயிரியலை பற்றி தமிழில் தந்ததாக நான் பார்க்கவில்லை.தொடரட்டும் உங்கள் சிறந்த பணி...நன்றியுடன்......ஸ்ரீதர்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு ஸ்ரீதர்...!!!

      நான் செய்யிறதெல்லாம் பெரிய விசயமே இல்லை. உங்க நேரத்தை ஒதுக்கி நான் எழுதறதை படிச்சிட்டு, அதை பாராட்டவும் செய்யறிங்க பாருங்க. அது பெரிய விஷயம். ஒரு வேலை செய்யிறதை விட அதுக்கான அங்கீகாரம் கெடைக்கறது தான் பெரிய விஷயம். கொஞ்ச வேலை பளுவினால என்னால் நேரம் ஒதுக்க முடியல கொஞ்ச நாளா. ஆனா உங்க மாதிரி கொஞ்சம் பேர் நான் எழுதறதை படிக்க காத்திட்டு இருக்காங்க அப்படிங்கற எண்ணமே என்னை மறுபடியும் எழுத தூண்டுது. சீக்கிரமே என்னோட அடுத்த பதிவை எதிர்ப்பார்க்கலாம்.

      Delete
  2. பல சர்க்கரை (தமிழாக்கம் சரியா? )- பாலி சாக்ரைடு - Polysaaccharide -
    கூட்டுச் சர்க்கரை என்பது இன்னும் சரியான பொருள் தரும் சொல்லமைப்பு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நானும் இதே சொல்லாடலை பின்னர் எழுதிய பதிவுகளில் உபயோகப்படுத்தி இருக்கிறேன்.

      Delete